×

கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கோடுப்பட்டி வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்தும், பீய்ச்சு அடித்தும் குதூகலித்து மகிழ்ந்தன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரக எல்லையில், மொரப்பூர் காப்புக்காடு கோடுப்பட்டி வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, கர்நாடக யானைகள் தற்போது இடம்பெயர்ந்து கோடுப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ளன.

அங்கு யானைகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதவாறு இருக்க வனத்துறை சார்பில் சிமெண்ட் தரைத்தள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் சூர்ய ஒளியில் இயங்கும் மின் மோட்டார் மூலம் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக நேரில் வந்து குடித்தும், உடல் சூட்டை தண்ணீர் பீய்ச்சி அடித்தும் யானைகள் குதூகலிக்கின்றன. நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்தன.

இதுகுறித்து வனத்துறை வனச்சரகர் நடராஜ் கூறுகையில், ‘பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. கோடைக்காலம் என்பதால் வனத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வனவிலங்குகளின் தாகத்திற்காக தண்ணீர் தொட்டிகள் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை வனத்துறையினர் நிரப்பி வைக்கின்றனர். நேற்று முன்தினம் குட்டிகளுடன் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஓடிவந்து தண்ணீரை குடித்தும், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்தும் குதூகலித்தன’ என்றார்.

The post கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Kodipatti Forest, ,Dharmapuri district ,Palakodu Wildlife Area ,Morapur Reserve ,Khodupati forest ,
× RELATED சூதாடிய 4 பேர் கைது